செய்திகள்
படகு சவாரி செய்து மகிழ்ந்தவர்களை படத்தில் காணலாம்.

ஊட்டியில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகள்

Published On 2021-09-19 09:10 GMT   |   Update On 2021-09-19 09:10 GMT
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்தது.
ஊட்டி:

கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடந்த நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் தற்போது களை கட்டி உள்ளது. தினந்தோறும் ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாபயணிகள் வருகை தருகிறார்கள்.

சனிக்கிழமையான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா மற்றும் குன்னூர் சுற்றுலா பூங்காவில் சுற்றுலாபயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்தது.

இதில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 4,983 பேர், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,328 பேர், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 384 பேர், மரவியல் பூங்காவுக்கு 38 பேர் வந்திருந்தனர். அதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,576 பேர், காட்டேரி பூங்காவுக்கு 439 பேர், கல்லாறு பழப்பண்ணைக்கு 192 பேர் வந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 3 ஆயிரம் பேர் பைக்காரா படகு இல்லத்துக்கு 1,800 பேர் வந்திருந்தனர். அவர்கள் படகில் சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஊட்டியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் ஓட்டல்கள், லாட்ஜ்கள் நிரம்பி காணப்பட்டன. பொதுமக்கள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே பல மாதங்களுக்கு பிறகு ஊட்டியில் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரிக்ஸ் பள்ளியில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது. புதுமுக நடிகர் சந்தோஷ் சோபன், குக்கூ படத்தில் நடித்த நடிகை மாளவிகா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

நாயகி சைக்கிளில் செல்வது, பள்ளியில் குழந்தைகளுடன் பேசுவது போன்ற காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. நீண்டநாட்களுக்கு பிறகு நடந்ததால் படப்பிடிப்பை சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

இதுபற்றி தெலுங்கு படத்தின் டைரக்டர் நந்தினி கூறுகையில், இந்த படத்தை நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் காட்சிகள் 85 சதவீதம் ஊட்டியில் எடுக்கப்படுகிறது. தேயிலை, காபி தோட்டங்கள் மலை முகடுகள் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.
Tags:    

Similar News