செய்திகள்
யானைகள்

கூடலூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்த 3 காட்டு யானைகள்- பயணிகள் அச்சம்

Published On 2021-09-17 10:05 GMT   |   Update On 2021-09-17 10:05 GMT
கூடலூர் அருகே இன்று காலை அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஊட்டியில் இருந்து மாயாறு பகுதிக்கு தினந்தோறும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணியளவில் ஊட்டியில் இருந்து மாயாறுக்கு அரசு பஸ் ஒன்று 10-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த பஸ் மசினகுடி அடுத்த அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்ற போது 3 காட்டு யானைகள் அந்த சாலையை மறித்து கொண்டு நின்றிருந்தன.

இதனை பார்த்ததும் பஸ் டிரைவர் சிறிது தூரத்திலேயே பஸ்சை நிறுத்தி விட்டார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. யானை நிற்பது தெரியாமல் வந்த வாகனத்தை யானை லேசாக தட்டி விட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தார்.

சிறிது நேரத்தில் 3 யானைகளில் 2 யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஒரு யானை மட்டும் செல்லாமல் சாலையிலேயே நின்று பயணிகளை அச்சுறுத்தி வந்தது.

திடீரென அந்த யானை ஆக்ரோ‌ஷத்துடன் அரசு பஸ்சை நோக்கி வேகமாக வந்தது.

இதனால் பஸ்சில் டிரைவர், கண்டக்டர் பயணிகள் உள்பட பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர். சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News