தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை:
சென்னையில் மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்லூரிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
கல்லூரியில் மாணவர்களுக்கு முககவசம் வழங்க சொல்லி இருக்கிறோம். வளாகங்களில் தனி மனித இடைவெளி அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.
கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது.
ஆனாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டத்தில் முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் தொற்று அதிகம் என்பதால் தமிழக எல்லையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு அலைக்காக மக்கள் காத்திருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி தட்டுப்பாடு அவ்வப்போது இருக்கிறது. தற்போதைய நிலையில் 12 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் 11 மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தி.மு.க. ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? பழனிசாமி