செய்திகள்
கோப்புப்படம்

மனநலம் பாதித்த சிறுவனை கொன்ற குஜராத் வாலிபருக்கு தூக்கு தண்டனை

Published On 2021-02-18 23:12 GMT   |   Update On 2021-02-18 23:12 GMT
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குஜராத் வாலிபருக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

குஜராத் மாநிலம், அம்பிகா பார்க் பகுதியை சேர்ந்தவர் டானிஷ் பட்டேல் (வயது 34). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்தார்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு வாய்பேச முடியாத 17 வயது சிறுவனை டானிஷ் பட்டேல் கடத்தி சென்று அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், மயங்கிய சிறுவன் ஆஸ்பத்திரியில் 18 நாட்கள் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் டானிஷ் பட்டேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி, டானிஷ் பட்டேலிடம், உன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உண்மை என தெரிகிறது. ஆகவே, தாங்கள் (டானிஷ் பட்டேல்) குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து நீதிபதி சத்யா, டானிஷ் பட்டேலுக்கு 3 மரண தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பின் விவரம் வருமாறு:-

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் (போக்சோ) 2019-ன் கீழ் சிறுவனுக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரிவு 5 (ஐ)-ன்படி மரண தண்டனையும், அந்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதால் பிரிவு 5 (கே)-ன் படி மரண தண்டனையும், மரணத்தை ஏற்படுத்தியதற்காக பிரிவு 5 (ஜே)(4)-ன்படி மரண தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

மேலும், சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண தொகையாக ஏற்கனவே ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தினருக்கு மேலும் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News