செய்திகள்
மகளை திறந்தவெளி கழிப்பறைக்கு தூக்கி செல்லும் தாய் மற்றும் உறவினர்.

கழிவறை வசதி கூட இல்லாமல் தினமும் மகளை தூக்கிச்சுமக்கும் வயதான தாய்

Published On 2021-02-17 06:22 GMT   |   Update On 2021-02-17 06:22 GMT
வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், போலியோவால் கை, கால்கள் செயலிழந்த மகளை, தினமும் திறந்தவெளிக்குச் சென்று வர தாய் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வலங்கொண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய மகள் பாக்கியம். போலியோவால் பாதிக்கப்பட்டு இடது கையும், இரண்டு கால்களும் முடங்கி விட்டது. தன் வலது கையைத் தரையில் ஊன்றி தவழ்ந்துகொண்டே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சென்று வருகிறார்.

இயற்கை உபாதை காரணங்களுக்காக, தினமும் பாக்கியத்தை இடுப்பில் தூக்கி வைத்து, திறந்தவெளிக்கு அவரது தாய் காளியம்மாள் கூட்டிச்சென்று வந்தார். தற்போது வயது முதிர்வால் மகளை தூக்கி சுமக்க முடியாமல் தவித்து வந்தார். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தினமும் திறந்தவெளிக்குச் சென்று வர பெரும் போராட்டத்தை சந்தித்து வந்தார்.

பாக்கியத்துக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, காளியம்மாளுக்குத் தன் மகளின் எதிர்காலம் குறித்த பயமும் ஏற்பட்டது. கணவரை இழந்த காளியம்மாள், மாற்றுத்திறனாளி மகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் இருந்தார்.



இதுபற்றி காளியம்மாள் கூறுகையில், பிறந்த ஒரு சில நாட்களிலேயே என் மகள் போலியோவால் பாதிக்கப்பட்டார். நடக்க கூட முடியாமல் தற்போது முடங்கியுள்ளார். மற்ற குழந்தைகளை போல் எனது மகளை என்னால் படிக்க வைக்க முடியவில்லை. அதிலும் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று வருகிறேன்.

நான் கூலி வேலைக்கு சென்றுதான் மகளை வளர்த்து வருகிறேன். அதிலும் பாக்கியத்துக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடுகிறது. கணவர் இருந்தவரை நன்றாக பார்த்துக்கொண்டார். அவரது இறப்பு எனது வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

ஒரு சிலரின் உதவியால் வீட்டின் முன்பு சிறியதாக ஒரு டீக்கடை வைத்தேன். கூலி வேலைக்குப் போயிட்டு வந்து தினமும் 5 லிட்டர் பால் வாங்கி, டீ போட்டு விற்பனை செய்தேன். தற்போது கூலி வேலைக்கும் செல்ல முடியவில்லை. ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால் கூட விற்பனையாகவில்லை.

என்னால் மகளை தூக்க முடியாததால் அவரே தவழ்ந்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வருகிறார். முடியாத சூழ்நிலையில் உறவினர்கள் வந்து உதவி செய்கிறார்கள். அவரது நிலையை பார்த்து தினமும் கண்கலங்கினேன். எப்படியாவது வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிவிட வேண்டும் என்று போராடினேன் என்றார்.

காளியம்மாள் மற்றும் மாற்றுத்திறனாளியான பாக்கியம் ஆகியோரது நிலை குறித்த அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உடனடியாக அதிகாரிகளை அனுப்பி அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி முதல்கட்டமாக பாக்கியத்துக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் கழிப்பறை கட்டித்தரவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் காளியம்மாள், பாக்கியத்தின் வாழ்வாதாரத்தை காக்க தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அவர்களின் வீடு தேடிச்சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அத்துடன் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News