செய்திகள்
சாத்தனூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து சாத்தனூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைக்கு லஞ்சம் கேட்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே நெடுங்காடி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்த குடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக குடிநீர் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சியில் பலமுறை புகார் செய்தும் ஊராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை கண்ணகந்தலில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், நெடுங்காவடி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 100 நாள் வேலைக்கு ஒரு நபருக்கு ரூ.100 லஞ்சம் கேட்பதாக புகார் கூறிய அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி தகவலறிந்த சாத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.