செய்திகள்
கடலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை: சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-14 12:38 GMT   |   Update On 2020-10-14 12:38 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் பாபு, திருமுருகன், சுப்புராயன், துணை தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பையன் கலந்து கொண்டு பேசினார். 

இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு தமிழரசன் உள்பட சி.ஐ.டி.யு., விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யு. மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சங்க மகேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கற்பனைச்செல்வம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செல்லையா, நெடுஞ்சேரலாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன் மற்றும் சிவலிங்கம், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
Tags:    

Similar News