செய்திகள்
மழை

கடந்த 10 நாட்களில் கடலூரில் 105 சதவீதம் அதிக மழைப்பொழிவு

Published On 2020-10-11 15:22 IST   |   Update On 2020-10-11 15:22:00 IST
கடந்த 10 நாட்களில் கடலூரில் 105 சதவீதம் மழை இயல்பை விடவும் அதிகமாக பதிவாகியுள்ளது. கோவையில் 66 சதவீதமும், நீலகிரியில் 51 சதவீதமும் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.
சென்னை:

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் மழைப்பொழிவு தொடர்பான விவரங்களை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இயல்பாக பதிவாக வேண்டிய மழை அளவு, பதிவான மழை அளவு மற்றும் அதற்கான வேறுபாடு அளவு ஆகியவற்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, கடலூரில் இயல்பாக 48.9 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். இயல்புக்கு அதிகமாக 100.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 105 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோல மதுரையில் 55.6 மி.மீ. மழை இயல்பாக பெய்ய வேண்டும். 89.7 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது 61 சதவீதம் அதிகம் ஆகும்.

சிவகங்கையில் 47.4 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 39 சதவீதம் அதிகமாக 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 63.6 மி.மீ. இயல்பான மழைக்கு பதிலாக 27 சதவீதம் அதிகமாக 80.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தர்மபுரியில் 68 மி.மீ. இயல்பான மழைக்கு பதிலாக 21 சதவீதம் அதிகமாக 82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 61.1 மி.மீ. மழை இயல்பாக பதிவாகியிருக்கவேண்டும். 16 சதவீதம் அதிகமாக 70.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாகையில் 45.9 மி.மீ. மழை இயல்பாக பெய்திருக்க வேண்டும். 1 சதவீதம் அதிகமாக 46.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல ஈரோட்டில் 43.7 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். 1 சதவீதம் அதிகமாக 44.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 51.9 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். வேறுபாடு இன்றி 51.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல நாமக்கல்லில் 48.3 மி.மீ. மழை இயல்பாக பதிவாக வேண்டும். வேறுபாடு இன்றி 48.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.

தலைநகர் சென்னையில் இந்த காலக்கட்டத்தில் 56.7 மி.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 91 சதவீதம் குறைவாக வெறும் 5.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல அரியலூரில் 56 சதவீதம், செங்கல்பட்டில் 83 சதவீதம், கோவையில் 66 சதவீதம், திண்டுக்கல்லில் 32 சதவீதம், காஞ்சீபுரத்தில் 62 சதவீதம், கன்னியாகுமரியில் 79 சதவீதம், கரூரில் 29 சதவீதம், கிருஷ்ணகிரியில் 19 சதவீதம், நீலகிரியில் 51 சதவீதம், பெரம்பலூரில் 13 சதவீதம், புதுக்கோட்டையில் 18 சதவீதம் இயல்பை விடவும் குறைவாக மழை பெய்துள்ளது.

ராமநாதபுரத்தில் 32 சதவீதம், ராணிப்பேட்டையில் 92 சதவீதம், தஞ்சையில் 50 சதவீதம், தேனியில் 38 சதவீதம், தென்காசியில் 49 சதவீதம், நெல்லையில் 35 சதவீதம், திருப்பத்தூரில் 80 சதவீதம், திருப்பூரில் 67 சதவீதம், திருவள்ளூரில் 84 சதவீதம், திருவண்ணாமலையில் 45 சதவீதம், திருவாரூரில் 6 சதவீதம், தூத்துக்குடியில் 87 சதவீதம், திருச்சியில் 73 சதவீதம், வேலூரில் 88 சதவீதம், விருதுநகரில் 41 சதவீதமும் இயல்பை விடவும் குறைவான மழை பெய்துள்ளது.

Similar News