செய்திகள்
வழக்கு பதிவு

சென்னையில் இருந்து பாத யாத்திரையாக வேளாங்கண்ணி வந்த 3 பேர் மீது வழக்கு

Published On 2020-08-26 19:40 IST   |   Update On 2020-08-26 19:40:00 IST
சென்னையில் இருந்து பாத யாத்திரையாக வேளாங்கண்ணி வந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்வது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3 பேரும் சென்னை பலவந்தங்கல் நேரு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது37), சந்தானம் (50), ஆரோக்கியசாமி (46) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் வேளாங்கண்ணிக்கு வெளியூர் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி எடுத்துக்கூறி எச்சரிக்கை விடுத்து, திருப்பி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாகூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Similar News