null
தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார்? - தலைமை நீதிபதி கேள்வி!
- 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது
- படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மறு தணிக்கை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதியே ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஜனவரி 6ம் தேதி தான் சான்றிதழ் கோரி பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மறுஆய்வு முடிவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை. பதில் மனு தாக்கலுக்கு அவகாசம் தராமல், மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவு தனி நீதிபதியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து மண்டல வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்தது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா? என நீதிபதி கேள்வி. அதற்கு அவர் படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார் என நீதிபதி வினவினார். அதற்கு, புகாரை அடுத்து சான்றிதழ் வழங்கும் முடிவை நிறுத்திவைத்தோம். தற்போதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.