இந்தியா

கட்சிக்கு நிதின் நபின்தான் தலைவர், நான் தொண்டன் மட்டுமே: பிரதமர் மோடி

Published On 2026-01-20 15:02 IST   |   Update On 2026-01-20 15:02:00 IST
  • பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி:

பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியை வலுப்படுத்த பங்களித்த பா.ஜ.க.வின் அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

கட்சி என்று வரும்போது நிதின் நவீன்தான் தலைவர். நான் ஒரு கட்சித் தொண்டன்.

நிதின் நபின் இப்போது நமது தலைவராக இருக்கிறார். அவரது பொறுப்பு பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதாகும்.

நிதின் நபின் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழு பொறுப்புடன் வெற்றிகரமாக முடித்து தன்னை நிரூபித்துள்ளார். அவரிடம் இளமைத்துடிப்புடன் கூடிய ஆற்றலும், நிறுவனங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவமும் உள்ளது. இது ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பா.ஜ.க.வில் தலைவர்கள் மாறுகிறார்கள். ஆனால் கொள்கைகள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது. ஆனால் திசை மாறுவதில்லை.

பா.ஜ.க. ஒரு தனித்துவமான கட்சியாக உருவெடுத்தது. இப்போது அது ஒரு ஆளும் கட்சி என்பதை நிரூபித்துள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதே எப்போதும் எங்களது முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதிகாரத்தை நாங்கள் சேவைக்காக மாற்றியுள்ளோம். அதனால் தான் பா.ஜ.க. மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் அரியானா, அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. தனது சொந்த பலத்தால் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்கம், தெலுங்கானாவில் பா.ஜ.க. மக்களின் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News