செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை படத்தில் காணலாம்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டிரைவர் கைது

Published On 2020-07-15 18:48 IST   |   Update On 2020-07-15 18:48:00 IST
மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் அகர மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் அகர மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி உத்தரவின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார், மணலுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரி டிரைவர், திருவண்ணாமலை மாவட்டம் சின்ன பாளையப்பட்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கனகராஜை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இதேபோல் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூரில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் எடுத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் விரட்டி சென்று நீடூர் பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கிளனர் தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் லாரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News