செய்திகள்
வழக்கு பதிவு

சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி போராட்டம்- 91 மீனவர்கள் மீது வழக்கு

Published On 2020-07-13 08:09 GMT   |   Update On 2020-07-13 08:09 GMT
சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி நாகையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 91 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நாகப்பட்டினம்:

கடல் மீன் பிடிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின்படி மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி உள்ளிட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்களா? என்பதை மீன்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நாகை நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, நாகூர், செருதூர், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர், திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதையொட்டி சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நாகையை அடுத்த வாஞ்சூர், கானூர், மேலையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

சிரமப்பட்டு கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்களை பறிமுதல் செய்ய கூடாது என்பன போன்றகோரிக்கைகளை வலியுறுத்தியும், மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின்போது மீனவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக நாகை நம்பியார் நகரை சேர்ந்த கலைவாணன், கேசவன், முத்துவேல், சங்கர் மற்றும் 50 பெண்கள் உள்பட 91 பேர் மீது வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News