செய்திகள்
கோப்புப்படம்

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திடீர் திருமணம்

Published On 2019-11-11 11:37 GMT   |   Update On 2019-11-11 11:37 GMT
கறம்பக்குடியில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திடீரென திருமணம் நடைபெற்றது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிலா விடுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 29), கும்பகோணத்தை சேர்ந்த மாதவி (24) ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பிலாவிடுதியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன் (30), நாகப்பட்டினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தேவி (27) ஆகியோர் எதார்த்தமாக சந்தித்து அவர்களது பாசையில் பேசிக்கொண்டனர்.

இதையறிந்த இரு தரப்பு உறவினர்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கலந்து பேசினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து வாய் பேச முடியாத 2பேருக்கும் உடனடியாக திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை கறம்பக்குடி முருகன் கோவிலில் 2பேருக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் பலர் மணமக்களை வாழ்த்தி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆனால் இவர்களுக்கு இன்னொருவர் திருமணத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிச்சென்றனர்.

திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் உறவினர் சிற்றரசு என்பவர் கூறுகையில், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, மற்றொரு நாளில் திருமணம் நடத்தி வைக்கலாம் என்று இருந்தோம். ஆனால் யாராவது எதையாவது கூறி திருமணம் நடைபெற காலதாமதமாகி விடும் என்று நினைத்து உடனே திருமணத்தை நடத்தி விட்டோம் என்றார்.
Tags:    

Similar News