செய்திகள்
கொள்ளை நடந்த ஏடிஎம் மையம்.

அறந்தாங்கி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

Published On 2019-11-08 11:56 GMT   |   Update On 2019-11-08 11:56 GMT
அறந்தாங்கி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி. எம். மையம் உள்ளது.

அப்பகுதியில் வியாபாரிகள் அதிகம் பேர் உள்ளதால் அந்த மையத்தில் பணம் செலுத்துவதற்கான எந்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் இந்த மையத்தில் உள்ள எந்திரங்கள் மூலம் பணம் செலுத்தியும், எடுத்தும் வந்தனர். இதனால் பாதுகாப்புக்காக கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு வரை வங்கி நிர்வாகம் பாதுகாவலரை பணியில் அமர்த்தி இருந்தது.

நிதிநிலை கருதி, வங்கி நிர்வாகம் பாதுகாவலரை பணியில் இருந்து நிறுத்தியது. இதன் காரணமாக அந்த ஏ.டி.எம். மையம் பாதுகாப்பற்ற முறையிலேயே இருந்து வந்தது. சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து அங்குள்ள எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்திரங்களை உடைக்க முடியாத நிலையில், அதனை உடைக்கும் சத்தம் வெளியே கேட்டுள்ளதுடன், ஆட்கள் நடமாட்டம் இருக்கவே, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதனிடையே அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ்காரர்கள், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை பார்த்து உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக ரூ.15 லட்சம் வரை பணம் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பலர், ஏ.டி.எம்.மில் உள்ள பணம் செலுத்தும் எந்திரம் மூலமே பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்தனர்.

இதன் மூலம் நேற்று அந்த எந்திரத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் செலுத்திய பல லட்சம் பணம் இருந்தது. கொள்ளையர்களால் எந்திரங்களை உடைக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாவலர் இல்லாததே இந்த கொள்ளை முயற்சிக்கு காரணம். எனவே பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News