செய்திகள்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகள் சீரமைக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கழிவறைகள் மூடப்பட்டதால் பயணிகள் அவதி

Published On 2019-10-18 11:38 GMT   |   Update On 2019-10-18 11:38 GMT
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கழிவறைகள் மூடப்பட்டதால் பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேலூர்:

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு நகரங்களுக்கும்,தென் மாவட்டங்கள்,மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்த செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் கட்டண கழிவறைகள் கட்டப்பட்டு பொதுமக்கள், பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதை மாநகராட்சி சரியாக பராமரிக்கவில்லை. இதனால் கழிவறைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அங்கேயே தேங்கியது. சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் துர்நாற்றம் வீசி வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் தேசிய துப்புரவு நல ஆணையஉறுப்பினர் ஜெகதீஷ்கிர்மானி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கழிவறைகளின் சீர்கேட்டை பார்த்த அவர் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தார். மேலும் உடனடியாக கழிவறைகளை சீரமைத்து, சுகாதார சீர்கேட்டை தடுக்க உத்தரவிட்டார்.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கழிவறைகளை சீரமைக்காமல், தற்போது 2 கழிவறைகளை மூடிவிட்டனர். இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பஸ் நிலைய பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் நிற்க முடியாமல் அவதிபடுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News