செய்திகள்

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

Published On 2019-05-27 08:40 GMT   |   Update On 2019-05-27 08:40 GMT
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லியில் வரும் 30ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முதல் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.



இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவும் திட்டமிட்டுள்ளார்.

ரஜினி எப்போதுமே பா.ஜனதா தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த அரசுக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வாரா என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

ரஜினி மும்பையில் தொடங்க இருக்கும் தர்பார் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக நாளை மதியம் மும்பை செல்ல இருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொள்வாரா இல்லை படப்பிடிப்பை காரணம் காட்டி செல்ல மாட்டாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஒருவேளை பங்கேற்கவில்லை என்றாலும் கூட மனைவி லதாவை அனுப்பி வாழ்த்துகள் தெரிவிப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க  வருமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News