'அர்ஜுனன் பேர் பத்து'... வெளியானது நடிகர் யோகிபாபுவின் 300-வது படத்தின் தலைப்பு
- நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீரின் 'யோகி' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு. இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே, நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான 'மண்டேலா' படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் 300-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'அர்ஜுனன் பேர் பத்து' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.