செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்- திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரம்

Published On 2019-05-07 11:16 GMT   |   Update On 2019-05-07 11:16 GMT
தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.
கரூர்:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி தொகுதியில் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் க.பரமத்தி தென்னிலை பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் மகளிருக்கு வேலை, நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதேபோன்று ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் போன்ற காங்கிரசின் வாக்குறுதிகளும் மக்களிடம் அமோக வரவேற்பினை பெற்றன.

அதனால் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி பிரதமராவார். தமிழகத்தில் நடந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், வருகிற 19-ந்தேதி நடைபெறும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார். அவர் பதவி ஏற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். அரவக்குறிச்சியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும். இது எப்படி நிறைவேற்ற முடியும் என ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். வயிற்றெரிச்சலால் ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். என் வாழ்நாளில் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News