சேர்க்காடு அருகே தேர்வில் தோல்வி - பிளஸ்-2 மாணவர் தற்கொலை
வாலாஜா:
சேர்க்காடுவை அடுத்த முத்தரசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). இவருடைய மகன் மணிகண்டன் (18). இவர், சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் அவர், தோல்வி அடைந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டார். தான் 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டு விட்டேன் எனத் தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.