செய்திகள்

பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது- தம்பிதுரை வேதனை

Published On 2019-02-28 10:56 GMT   |   Update On 2019-02-28 10:56 GMT
பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார். #ThambiDurai
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது.



மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai
Tags:    

Similar News