செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை- தம்பிதுரை பேட்டி

Published On 2019-02-18 10:45 GMT   |   Update On 2019-02-18 10:45 GMT
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #admk #parliamentelection

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.

இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection

Tags:    

Similar News