செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் பதில் மனு

Published On 2019-02-15 08:03 GMT   |   Update On 2019-02-15 08:03 GMT
ஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டில் ஆணையத்தின் செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். #ArumugasamyCommission #Jayalalithaa
சென்னை:

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் கடந்த வாரம் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிப்பதாகவும், அதற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

21 துறைகளை சார்ந்த மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கவும் அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் இன்று ஆணையத்தின் செயலாளர் கோமளா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், முடியும் தருவாயில் உள்ள விசாரணை தொடர்வதை தடுக்கவே அப்பல்லோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் சிகிச்சை, மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், மரணத்தில் சந்தேகம் தெரிவித்து தமிழகம் முழுக்க 302 புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 30 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் விசாரணை ஆணைய செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணையத்தை எதிர்த்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், 147 சாட்சிகள், 56 மருத்துவர்கள், 22 துணை மருத்துவ துறையினர் இதுவரை சாட்சியமளித்துள்ளதையும் பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரிக்கும்போது நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆணையத்தில் மருத்துவர்களால் கூறிய வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும், அவை தட்டச்சு தவறுகள் தான் என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவிற்கு, பதிலளிக்க அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை பிப்ரவரி 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #ArumugasamyCommission #Jayalalithaa
Tags:    

Similar News