2025 - ஒரு பார்வை

2025 REWIND: உலக சினிமாவில் இதுவே முதல் முறை - முகமற்ற, வார்த்தைகளற்ற 'மெட்டா' திரைப்படம்

Published On 2025-12-24 14:00 IST   |   Update On 2025-12-24 14:00:00 IST
  • ஒரு படத்தையே ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • ஒரு புதிய முயற்சியாகத்தான் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

உலக சினிமா பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒலி இல்லாத படமாக வெளிவந்து, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து பேசும் படம் உருவானது. கருப்பு-வெள்ளை படத்தில் இருந்து ஈஸ்மெண்ட் கலர், பின்னர் கலர் திரைப்படங்கள் உருவாகின. சினிமாவை எடுக்கும் தொழில்நுட்பங்களிலும் பல்வேறு வளர்ச்சியை திரைத்துறை கண்டிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளிலும் பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து விட்டோம். ஒரு படத்தையே 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்திலும் விருதுக்காகவும், பாராட்டுக்காகவும் மெனக்கெடும் திரை கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் படத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி, அதன் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகத்தான் 'மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்' திரைப்படம் உருவாகியிருக்கிறது.


மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்:

ஊமைப்படம், பேசும்படம் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப சினிமா வரை வந்திருந்தாலும், இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை. அந்தப் புதுமையை 'மெட்டா' திரைப்படம் செய்திருக்கிறது.

இது ஒரு இந்திய திரைப்படம், அவ்வளவுதான். இந்தப் படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமெண்ட், திரில்லர், கற்பனை ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஒற்றை கதாபாத்திரம்தான். அந்தப் பெண் கதாபாத்திரமும் முகம் காட்டாதபடி வந்துபோகிறது. படத்தில் எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் உலக அரங்கில் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். இதுதான் முதல் முறையாம். அதைப் பெருமையாக படத்தின் தொடக்கத்திலேயே 'கார்டு' போட்டு சொல்லவும் செய்திருக்கிறார்கள். 'இந்தப் படம் உலகின் முதல் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற, ஒற்றை கதாபாத்திரம் உயிர்வாழும் படம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்பதை பதிவு செய்கிறார்கள்.


இந்தப் படத்தின் கதைப்படி, மெட்டா என்ற இளம்பெண், தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில், பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தைக் காண்கிறாள். அங்கே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை, ஒரு மாயப் பானையில் சிக்க வைக்கிறது. அந்தப் பெண், தன்னை அறியாமல் செய்த கர்ம விணை இயற்கை அளித்த பதிலடியாக இது அமைகிறது. ஒரு சாதாரண நாளில் அவளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மெட்டா எடுக்கும் அறிவு சார்ந்த மற்றும் சாகச முயற்சிதான், இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தை பிரசாந்த் மாம்புல்லி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒற்றை நபராக, எந்த காட்சியிலும் முகத்தை பதிவு செய்யாத கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட, இந்தப் பெண்ணின் தலையில் பானையை கவிழ்த்தி, அவர் முகம் தெரியாத வகையில்தான் அறிமுகம் செய்தனர். அதனால் அந்தப் படத்தில் நடித்த பெண் யார் என்பதில் கூட இன்றும் ஒரு தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள இந்தத் திரைப்படம், முன்னதாக உலக திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


'மெட்டா: திடேஸ்லிங் கேர்ள்' திரைப்படத்தை இயக்கியவர், பிரசாந்த் மாம்புல்லி. இவர் கேரள மாநிலம் குருவாயூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2009-ம் ஆண்டு மோகன்லாலை கதாநாயகனாக வைத்து, 'பகவான்' என்ற படத்தை இயக்கி, திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை அவர் 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்திருந்தார்.

அடுத்ததாக கன்னடத்தில் அறிமுகமான இவர், அங்கு சிவராஜ்குமாரை நாயகனாக வைத்து 'சுக்ரீவா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 18 மணி நேரத்தில் எடுத்து முடித்தார். இதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். இந்த சாதனையானது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இப்படி இதுவரை பிரசாந்த் மாம்புல்லி இயக்கிய 7 படங்களும் ஏதோ ஒரு வகையில் சாதனைக்குரிய படமாகவே அமைந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் இப்போது 'மெட்டா' திரைப்படம் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

Tags:    

Similar News