2025 - ஒரு பார்வை

2025 REWIND: பேச்சுவார்த்தை தோல்வி - காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ

Published On 2025-12-26 11:00 IST   |   Update On 2025-12-26 11:00:00 IST
  • டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.
  • ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) என்பது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பல வடிவங்களில் நடத்தப்பட்டுள்ளன.

முக்கியக் கோரிக்கைகள் (10 அம்சக் கோரிக்கைகள்):

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்ய வேண்டும்.

பணியிடங்களை நிரப்ப வேண்டும் (Vacancies).

ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

விடுப்பு ரொக்கமாக்கும் வசதியைத் திரும்பப் பெற வேண்டும் (Leave Encashment).

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் (Pay Discrepancies).

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் டிச.8-ந்தேதி 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டது.

சுமார் 10,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் கூடி, அங்கிருந்து பேரணியாகச் சென்று DPI வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த ஆயத்தமானார்கள்.

தலைநகர் சென்னைக்கு இன்று புறப்படத் தயாரான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தமிழக காவல்துறை திடீரென கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தது.

 

 

இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 22-ந்தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் கூறுகையில், பேச்சுவார்த்தை ஒரு விளையாட்டு போல அமைந்தது. கடந்த 4 பேச்சுவார்த்தைகளில் கூறியதையே அமைச்சர்கள் மீண்டும் கூறினர். அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிச.27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடைபெறும். வரும் ஜன.6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News