செய்திகள்
வானதி சீனிவாசன் பேட்டி அளித்த காட்சி.

வைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்- வானதி சீனிவாசன்

Published On 2019-02-13 07:43 GMT   |   Update On 2019-02-13 08:20 GMT
பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதன் மூலம் வைகோ தனது மரியாதையை இழந்து வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். #BJP #VanathiSrinivasan #Vaiko
ஈரோடு:

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோடு அடுத்த சித்தோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு நாளை காலை 10 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து 12 மணி அளவில் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற பூத் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடந்த 10-ந்தேதி திருப்பூரில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது அமித்ஷா ஈரோடுக்கு வர உள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற பரபரப்பான சூழ்நிலையில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது வைகோ கருப்புக்கொடி காட்டுவதன் மூலமாக அவர் சிறிது சிறிதாக தனது மரியாதையை இழந்து வருகிறார். வைகோ எம்பியாக இருந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு நல்லதும் செய்யவில்லை. அதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறார்.

பெரும் தலைவராக இருந்த வைகோ தற்போது சின்ன சின்ன குழுக்களின் தலைவராக இருப்பது வேதனை அளிக்கிறது. இதே வைகோதான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று ஆதரவளித்தார்.

இலங்கை பிரச்சனை இருக்கட்டும் மீனவர் பிரச்சனையையும் பிரதமர் மோடி தீர்த்து வைத்துள்ளார். அதனால் வேறு வழியில்லாமல் வைகோ கருப்பு கொடி காட்டி வருகிறார்.

கஜா புயலின்போது மத்திய அரசு உதவிக்கு வரவில்லை என்பது தவறான செய்தி. புயல் பாதித்த சமயத்தில் மத்திய அமைச்சர் அங்கு 48 மணி நேரம் முகாமிட்டு தங்கியிருந்து தேவையான உதவிகள் செய்து வந்தார்.

மேலும் ராணுவ மந்திரி அங்கு சென்று அனைத்து உதவியும் செய்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தனது முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக பலமான வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.

இவர் அவர் கூறினார். #BJP #VanathiSrinivasan #Vaiko
Tags:    

Similar News