செய்திகள்

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது: திருநாவுக்கரசர்

Published On 2019-01-30 23:14 GMT   |   Update On 2019-01-30 23:14 GMT
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் ஒரே கூட்டணியாக போட்டியிடுவோம்.

தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் பலமாக உள்ளது. 40 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாக மோடி சொல்லி பல நாட்களாகியும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இது வினோதமாக உள்ளது.

கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ராமர் கோவில் கட்ட முடியாது. இந்து வாக்கு வங்கியை பெற தேர்தலுக்கு முன்னால் பாரதிய ஜனதா சொல்லும் வார்த்தை இது.

ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி எந்த அடிப்படையில் சொன்னாரோ, அதன்படியே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் ஏழை மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடுவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதை ராகுல் காந்தி நடைமுறைப்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News