செய்திகள்

மோடி கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தும் உள்ளே செல்ல யாரும் இல்லை - திருநாவுக்கரசர்

Published On 2019-01-23 06:48 GMT   |   Update On 2019-01-23 06:48 GMT
பிரதமர் மோடி கூட்டணி கதவு திறந்து இருப்பதாக கூறியிருந்தும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
ஆலந்தூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி, நாளை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதற்கு காங்கிரசும் ஆதரவு அளிக்கும். இந்த பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை தேவை.

மாநில அரசு குறித்து யாராவது குற்றம் சாட்டினால் தி.மு.க. பின்னணியில் இருக்கிறது என்கிறார்கள். மத்திய அரசு பற்றி குற்றம் சாட்டினால் காங்கிரஸ் பின்னணியில் உள்ளது என்று கூறுகிறார்கள். இது பிரச்சினையை திசை திருப்பும் செயல். மக்களை ஏமாற்றும் நாடகம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தமிழ்நாட்டின் உண்மை நிலையை அறியாமல் கூட்டணி பற்றி கருத்து கூறி இருக்கிறார். அ.தி.மு.க., தினகரன் கட்சிகள் இணைந்து பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பம் நிறைவேற வாய்ப்பு இல்லை.

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க., தினகரன் கட்சி கூட்டணி சேர வேண்டும் என்று அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தம்பிதுரை போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பா.ஜனதாவுக்கு எதிராக கூறி வருகிறார்கள். தினகரனும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவில் கூட்டணி வைப்பதற்காக யாரும் இந்த கதவு வழியாக உள்ளே போகவில்லை. போக தயாராகவும் இல்லை. தற்போது பா.ஜனதா தனித்து விடப்பட்டுள்ளது.



ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக சையது சுஜா என்ற மின்னணு நிபுணர் கூறி இருக்கிறார். இதை அறிந்த மத்திய பிரதேச மாநில பா.ஜனதா பிரமுகர் கோபிநாத் முண்டே, வாக்கு எந்திரங்களை வடிவமைத்த அரசு நிறுவன ஊழியர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும். மத்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சாக்குப்போக்கு சொல்லி நழுவக்கூடாது. மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை நானும் வரவேற்கிறேன்.

மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கு பேசும் போது, பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என்பதை ஏன் வற்புறுத்தவில்லை என்று எதிர் அணியினர் கேட்கிறார்கள்.

ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கருத்தை மு.க.ஸ்டாலின் பிரதிபலித்தார். மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பிரதமர் குறித்து யாரும் கருத்து சொல்லவில்லை. எனவே, சபை நாகரீகம் கருதி ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பற்றி குறிப்பிடவில்லை.

தமிழக அரசு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. இதன்மூலம் எங்கு எல்லாம் தொழிற்சாலை வரும்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #PMModi #BJP #Congress #Thirunavukkarasar
Tags:    

Similar News