செய்திகள்

மதுரைக்கு 27-ந்தேதி வருகை தரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- வைகோ பேச்சு

Published On 2019-01-18 18:25 IST   |   Update On 2019-01-18 18:25:00 IST
மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு மதிமுக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ பேசினார். #pmmodi #vaiko #gajacyclone

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. மேலும் ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை.

தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.


கஜா புயலால் பாதித்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் என்பது எனது வியூகம்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு ம.தி.மு.க. என்றென்றும் துணை நின்று போராட்டம் நடத்தும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறுஅவர் கூறினார். #pmmodi #vaiko #gajacyclone

Tags:    

Similar News