செய்திகள்

ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி - கமல்ஹாசன்

Published On 2019-01-17 15:14 IST   |   Update On 2019-01-17 15:14:00 IST
ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
ஆலந்தூர்:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

மேலும் அதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவல்ல. மக்கள் நீதி மய்யம் அதில் தெளிவாக இருக்கிறது. எங்களுடைய முக்கிய நோக்கமே தமிழகம் தான். எது எது நல்ல வி‌ஷயங்களோ அங்கே நான் போவேன்.

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அந்த அரசு கடைபிடித்துக் கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை. அந்த மலை தமிழத்தில் இருந்து இருந்தாலும் நாமும் அந்த தீர்ப்பை கடை பிடித்திருப்போம். அந்த தீர்ப்பை செயல்படுத்த கடமைப்பட்டு இருப்போம்.

மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தீர்மானித்து அதை செய்தால் எந்த கோர்ட்டும் ஒன்றும் செய்ய முடியாது.

ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன். ஊழல் இல்லை என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்வார்கள். நிரூபிக்கப்பட்ட பின்தான் தெரியும். அதில் நாங்கள் முன் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.

ரஜினியின் பேட்ட படம், அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் போட்டி என்பது ஒரு வியாபாரம். ஒரு விளையாட்டை எப்படி ஸ்போர்ட்டிவாக எடுத்து கொள்கிறோமோ அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் 40 வருடமாக செய்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News