செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- திமுக எம்பி, எம்எல்ஏக்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை

Published On 2018-12-24 06:35 GMT   |   Update On 2018-12-24 06:35 GMT
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. #DMK #MKStalin
சென்னை:

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்திலும் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்துள்ள தி.மு.க., தேர்தலை எதிர் கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பூங்கோதை, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தினகரன் அணியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படுகிறது. #DMK #MKStalin
Tags:    

Similar News