செய்திகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அகற்ற சிறப்பு அதிகாரிகள்- மத்திய மந்திரி உறுதி

Published On 2018-12-20 16:24 IST   |   Update On 2018-12-20 16:24:00 IST
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மரங்களை அகற்ற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #gajacyclone

சென்னை:

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் பொன்.ராதா­கிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், மாநில பா.ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், வேதரத்தினம் ஆகியோர் டெல்லியில் மத்திய விவசாய மந்திரி ராதாமோகனை சந்தித்து பேசினார்கள்.

அப்போது புயல் சேதங்கள் மற்றும் அந்த பகுதியின் தற்போதைய நிலைமை, என்னென்ன வகைகளில் அந்த பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவுவது என்று விவாதித்தனர். இன்று சென்னை திரும்பிய வானதி சீனிவாசன் இதுபற்றி கூறியதாவது:-

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிலவும் கள நிலவரங்களை மத்திய மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதையடுத்து மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க ஒத்துக் கொண்டார்.

மத்திய அரசின் தென்னை வாரியம் மூலம் தென்னங்கன்றுகள் வழங்க சிறப்பு நிதி வழங்க மத்திய நிதி மந்திரியிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

குறுகிய கால பயிர், ஊடுபயிர் திட்டத்தின் மூலம் பயிர் வளர்ச்சிக்காக அந்த பகுதிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

தென்னை மரம் வளர்ந்து பலன் கொடுக்கும் காலம் வரை விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றியும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசு கொடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசு சில விளக்கங்கள் கேட்டுள்ளது. அது கிடைத்ததும் நிவாரண நிதி வழங்குவார்கள்

மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு. தமிழக வேளாண் அமைச்சர், வீட்டு வசதி அமைச்சர், கிராம மேம்பாட்டுத்துறை என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் டெல்லி சென்று துறை மந்திரிகளை சந்தித்து ஒவ்வொரு துறையிலும் தேவையான திட்டங்களை பெறுவதற்கு முயற்சிக்கலாம். இங்குள்ள நடைமுறை சிக்கலை எடுத்து சொல்லி அதற்கு ஏற்றவாறு முயற்சிகள் மேற்கொண்டால் ஏதுவாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் பாராமுகமாக இருப்பதாக கூறினால் எப்படி? மத்திய அரசு பார்த்து கொண்டு தான் இருக்கிறது. கேட்பதை செய்வதற்கு காத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone 

Tags:    

Similar News