செய்திகள்

போதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்துக்கு தரவில்லை- மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்

Published On 2018-12-19 07:18 GMT   |   Update On 2018-12-19 07:18 GMT
மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. #GajaCycloneRelief #HCMaduraiBench
மதுரை:

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடம் நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #GajaCycloneRelief #HCMaduraiBench
Tags:    

Similar News