செய்திகள்

விஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன் தகவல்

Published On 2018-12-14 05:50 GMT   |   Update On 2018-12-14 05:50 GMT
டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
Tags:    

Similar News