செய்திகள்

அரசாணை நகலை எரித்த 1000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-12 09:36 GMT   |   Update On 2018-12-12 09:36 GMT
அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு:

ஈரோடு செங்கோடம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிததாக பள்ளிகூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரசிங் மூலம் புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

இன்று தமிழகம் முழுவதும் 250 பள்ளிகள் புதிதாக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 3 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 22 லட்சம் ஆகும்.

மேலும் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளும் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

ரூ.7,500 க்கு சம்பளம் பெறும் சிறப்பு ஆசிரியர்கள் எங்கு பற்றாக்குறை உள்ளதோ அங்கு அவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். தென் மாவட்டங்களில் கூடுதலாக 6 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிய வருகிறது.


பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

இடைநிலை பணி இடம் மாறுதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வழக்கை தொடர்ந்தவர் ஆசிரியரும் இல்லை. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த அரசானது தூய்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுக்கு எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் இல்லை.

வரும் கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடியில் படிக்கும் 51ஆயிரத்து 214 மாணவர்களை எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நபர் குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறது.

அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News