செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி

Published On 2018-12-05 13:42 IST   |   Update On 2018-12-05 13:42:00 IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு டி.டி.வி. தினகரன் தலைமையில் தொண்டர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். #Jayalalithaa #JayaMemorial #TTVDhinakaran
சென்னை:

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் வந்து கலந்து கொண்டனர்.

டி.டி.வி. தினகரன் அண்ணாசாலை பகுதிக்கு வந்த போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர். திறந்த ஜீப்பில் தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் மெரீனா கடற்கரை நோக்கி புறப்பட்டது. ஜீப்பில் தினகரனுடன் நிர்வாகிகள் அன்பழகன், பழனியப்பன், பி.வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தமிழன் ஆகியோர் சென்றனர்.


தொண்டர்கள் கட்சி கொடிகளை ஏந்தியவாறு அமைதியாக நடந்து சென்றனர். வாலாஜா சாலை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வழியாக கடற்கரை காமராஜர் சாலைக்கு சென்றது. அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

அமைதி பேரணி மெரினாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதற்காக போலீசார் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தனர். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையாக சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary #TTVDhinakaran
Tags:    

Similar News