செய்திகள்

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது- ரஜினிகாந்த்

Published On 2018-12-02 09:12 GMT   |   Update On 2018-12-02 09:12 GMT
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical
சென்னை:

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தனது அரசியல் வருகை பற்றி பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரஜினி, "அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்" எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்.

ஆனால் அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப்பெறுவதை விட இது மிகவும் முக்கியமானது.

மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.

நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுது போக்கிற்கு மட்டுமே.


எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்.ஜி.ஆர். தான் நிரூபித்துக் காட்டினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர் தான் ரோல்மாடல். அதேபோல் தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலுவான பெண்.

கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியில் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical #PMModi
Tags:    

Similar News