செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி

Published On 2018-11-27 17:19 GMT   |   Update On 2018-11-27 17:19 GMT
ஜெயங்கொண்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கலைத் தெருவில் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி செயல்பட்டு வந்தது. இதனை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் (வயது 40), ஆண்டிமடம் அருகே உள்ள அயினேஷ்வரம் பகுதியை சேர்ந்த அல்ப்போன்ஸ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிரபலமாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஜியாவுல்ஹக், அல்போன்ஸ் ஆகியோர் வேலை கேட்டு வரும் நபர்களிடம், அவர்கள் கேட்கும் வேலை, எந்த நாட்டில் வேலை எதிர்பார்க்கின்றனர் என்பதை பொறுத்து குறைந்தது ஒரு லட்சம் முதல் பேரம் பேசி வாங்கிக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் வேலைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை ஏற்பாடு செய்து கொடுக்காததால் அவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டுள்ளனர்.

அப்போது இருவரும் இன்றும் 10 நாட்களில் வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதியளித்ததோடு, 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அளித்த காலக்கெடுவுக்கு பின்னர், ஜெயங்கொண்டம் கலைத்தெருவில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்னர். அப்போது அது பூட்டப்பட்டு கிடந்துள்ளது.

இது குறித்து பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி அரியலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருவரும் வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த 8 பேர், பாண்டிச்சேரியை சேர்ந்த 18 பேர் என 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக ஒரு நபருக்கு தலா ஒரு லட்சம் வீதம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்போன்சை கைது செய்தனர். இதனை அறிந்து கொண்ட ஜியாவுல்ஹக் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து போலீசார் விமான நிலைய விசாரணை பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜியாவுல்ஹக்கினை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். மேலும் அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போலீசார் ஜியாவுல்ஹக் கினை கைது செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பின்னர் வழக்கினை விசாரித்த நீதிபதி மதிவாணன், ஜியாவுல் ஹக்கினை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News