செய்திகள்

திருப்பூர் - ஊட்டியில் பலத்த மழை- பள்ளி மாணவர்கள் அவதி

Published On 2018-11-22 10:30 GMT   |   Update On 2018-11-22 10:30 GMT
திருப்பூர், ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர். #ootyheavyrain

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில சமயம் தூறல் அடித்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் லேசான தூறல் அடித்தது. பின்னர் பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை நீடித்தது.

கோவை புறநகர் பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம், துடியலூர், கவுண்டம் பாளையம், கருமத்தம் பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை நீடித்தது.

கோவை மாநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பள்ளி மாணவர்கள் குடை பிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் பள்ளிக்கு சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை நீடித்தது. ஊட்டியில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை காரணமாக ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். #ootyheavyrain

Tags:    

Similar News