செய்திகள்

காதலன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 5 பேர் மீது வழக்கு

Published On 2018-11-19 10:55 GMT   |   Update On 2018-11-19 10:55 GMT
திருமங்கலம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில், கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் செல்வி (வயது 22) பி.இ. பட்டதாரி.

இவருக்கும், பக்கத்து ஊரான கல்லணைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி மகன் மாரிச்செல்வம் (25) என்ற பட்டதாரி வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாரிச்செல்வத்தின் வீட்டு முன்பு அமர்ந்து செல்வி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காதலன் மாரிச்செல்வம் திருமணத்திற்கு மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்வி தெரிவித்தார்.

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

அதில், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதோடு, தான் அதற்கு உடன்படாததால் திருமணம் செய்ய மாரிச்செல்வம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காதலன் வீட்டு முன்பு தர்ணா நடத்தியபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாரிச்செல்வம், அவரது தந்தை மலையாளி, தாயார் கருப்பசாமி, சகோதரர்கள் பகவதி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் பகவதி 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராகவும், கார்த்திக் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News