செய்திகள்

சூலூரில் வாலிபர் வெட்டிக் கொலை- காதல் பிரச்சினை காரணமா?

Published On 2018-11-18 16:36 GMT   |   Update On 2018-11-18 16:36 GMT
கோவையை அடுத்த சூலூரில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அஜய் குமார் வீடு அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து, தோள், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அஜய்குமார் நேற்று இரவு 10 மணி அளவில் தனது தந்தை ஆனந்த்குமாரிடம் ரூ.100 வாங்கிக் கொண்டு, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு என்ன நடந்தது? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது?அஜய் குமாருடன் பேக்கரிக்கு சென்ற நண்பர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜய்குமார் கடந்த சில நாட்களுக்கு வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News