செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-11-12 03:54 GMT   |   Update On 2018-11-12 03:54 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
பெரியகுளம்:

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.


ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

தமிழகத்தில் எந்தவொரு தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைவசம் உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போன விரக்தியில் அவர்கள் பேசுகின்றனர்.

வடகிழக்கு பருவமழை குறித்தும், வர இருக்கிற கஜா புயலால் சராசரி அளவை காட்டிலும் அதிக பாதிப்புகள் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டும் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பதவி கொடுத்தவர் சசிகலா என்று தினகரன் கூறுகிறார். எனக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதாதான். எங்களுக்கு அரசியல் ரீதியான எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இரட்டை இலையை வெற்றி சின்னமாக மாற்றுவோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam 
Tags:    

Similar News