செய்திகள்
ஆம்னிபஸ் பின்புறத்தில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட சாராய பாக்கெட் மூட்டைகளை படத்தில் காணலாம்

காரைக்காலில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 2500 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2018-11-05 10:28 GMT   |   Update On 2018-11-05 10:28 GMT
காரைக்காலில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 2500 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் - கண்டக்டர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு சோதனை சாவடியில் பொறையார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 10 மூட்டைகள் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. 10 மூட்டைகளிலும் 2500 பாக்கெட் சாராயம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து வேளாங்கண்ணி, கருவேலன் காட்டை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் சுப்பிரமணியன் (வயது 47). காரைக்கால் வருச்சிக்குடியை சேர்ந்த கண்டக்டர் முகமது ரியாசிதீன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட தனியார் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையை யொட்டி சீர்காழியை சேர்ந்த சாராய வியாபாரிக்கு சாராய பாக்கெட்டுக்களை பஸ்சில் மறைத்து வைத்து கொண்டு வந்ததாக பஸ் டிரைவரும், கண்டக்டரும் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சாராய வியாபாரி கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை கைது செய்தனர்.

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு ஆம்னிபஸ்சில் 10 சாராய மூட்டைகளை கடத்தி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News