செய்திகள்

சென்னை ரெயிலில் ரூ.5.70 கோடி கொள்ளை- மத்திய பிரதேச கொள்ளையர்கள் மேலும் 5 பேர் கைது

Published On 2018-10-30 07:50 GMT   |   Update On 2018-10-30 07:50 GMT
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.70 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான மேலும் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். #ChennaiTrainRobbery #RBIMoney
சென்னை:

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் நாமக்கல் பகுதியை சேர்ந்த வங்கிகளில் இருந்து பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட ரூ.342 கோடி பணம் 226 அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடுக்கப்பட்டு ஒரு ரெயில் பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த பெட்டியை சீல் வைத்து அதன் வெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரெயிலின் 19 பெட்டிகளில் பயணிகளும் பயணம் செய்தனர்.

இப்படி பயணிகளோடு வந்த ரெயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி 4 பெட்டிகளை உடைத்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பு துலங்கியது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநில கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கோப்புப்படம்

இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி தினேஷ், ரோகன் பார்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ரெயில் கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகர்சிங் என்ற கொள்ளையன் உள்பட 5 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

அங்கு வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 5 கொள்ளையர்களையும் அம்மாநில கோர்ட்டில் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

காலை 11.30 மணி அளவில் மோகர்சிங் உள்ளிட்ட 5 பேரும் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மோகர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள மற்ற கொள்ளையர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலையில் சி.பி.சி.ஐ.டி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டு பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். ஆனால் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் என்பது அவர்களுக்கே வெளிச்சமாகும்.  #ChennaiTrainRobbery #RBIMoney
Tags:    

Similar News