ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது.. இந்தியாவின் எதிர்ப்பை புறந்தள்ளிய சீனா!
- சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
- பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
இது 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத இந்தியா, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது.
சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு சீனா மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது" என்று தெரிவித்தது.
இது தொடர்பாகச் சீனாவிடம் தூதரக ரீதியாக இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் வாங் யீ, "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏறி அருகில் கடந்த சில ஆண்டுகளாக சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.