செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண்கள் சாமி ஆடிய காட்சி.

பேச்சாளர் பக்தி பாடல் பாடியதால் அதிமுக பொதுக்கூட்டத்தில் சாமி ஆடிய பெண்களால் பரபரப்பு

Published On 2018-10-26 08:14 GMT   |   Update On 2018-10-26 08:14 GMT
ஆரணியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பக்தி பாடல் பாடியதால் 15க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
ஆரணி:

ஆரணி காமக்கூரில் நேற்றிரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு வரவேற்றார்.

வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

கூட்டத்தில், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம் என்றார்.

அமைச்சர் கேட்டுக்கொண்டதால், பேச்சாளர் செல்வராஜ் ‘மேல்மலையனூர் அங்காளியே’ என்ற அம்மன் பக்தி பாடலை இசையுடன் பாடினார். அப்போது, திரண்டிருந்த பெண் தொண்டர்களில் 15-க்கும் மேற்பட்டோர் தலைவிரி கோலத்துடன் சாமி ஆடினர்.

இதையடுத்து, தண்ணீர் கொடுத்து சாமி ஆடிய பெண்களை தொண்டர்கள் சமரசப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமைச்சர் பேசியதாவது:- காமக்கூர், நடுக்குப்பம், குன்னத்தூர், சம்புவராய நல்லூர் ஆகிய கிராமங்களில் ரூ.59 லட்சத்தில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். #ADMK



Tags:    

Similar News