செய்திகள்

முல்லைப் பெரியாறில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி அளிப்பதா? - பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published On 2018-10-24 10:07 GMT   |   Update On 2018-10-24 10:07 GMT
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். #MullaperiyarDam #EdappadiPalaniswami #Modi
சென்னை:

முல்லை பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

புதிய அணை கட்ட தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



இந்நிலையில், முல்லைபெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இந்த முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். எனவே, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதியை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.  #MullaperiyarDam #MullaperiyarStudy #EdappadiPalaniswami #Modi
Tags:    

Similar News