செய்திகள்
முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன்பு தங்கதமிழ் செல்வன் புனித நீராடிய காட்சி.

சிபிஐ வழக்குக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்க தமிழ்செல்வன்

Published On 2018-10-19 06:13 GMT   |   Update On 2018-10-19 06:13 GMT
முதல்வர் மீதான சி.பி.ஐ. வழக்குக்கு எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ThangaTamilselvan
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

கூட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. வும், கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

டி.டி.வி. தினகரன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆர்.கே. தொகுதியில் நின்று வென்று காட்டுவாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். டி.டி.வி. தினகரன் தான் ஏற்கனவே ஆர்.கே. தொகுதியில் நின்று வென்று எம்.எல்.ஏ. ஆகி விட்டார். பின்னர் எதற்காக மீண்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் உள்பட தமிழக அமைச்சர்கள் மூளை குழம்பி போய் உள்ளனர். டி.டி.வி தினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும். வர இருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலிலே போட்டியிட்டால் 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். நிச்சயம் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் இல்லை. தமிழகத்தில் ரெட் அலர்ட் மூலம் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தமிழக அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விட்டுள்ளது. தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மட்டுமல்ல, தி.மு.க.வும் பயந்துள்ளது.

முதல்வர் மீதான சி.பி.ஐ. வழக்குக்கு எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் டி.டி.வி. தினகரனை சந்தித்தார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.


இந்த நிலையில் வெளிப்படையாகவே தினகரனை சந்தித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்ட பின்னரும் அவர் மீது ஏன் அ.தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்கவில்லை. தினகரனை சந்தித்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை இறக்கி விட்டு, தினகரனை முதலமைச்சர் ஆக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி எதுவும் செயல்படுத்தப்படவில்லை. புஷ்கர விழா நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்காக சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கீடு மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி வெறும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரை மட்டுமே கொண்டு நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ThangaTamilselvan
Tags:    

Similar News