செய்திகள்

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2018-10-11 08:14 GMT   |   Update On 2018-10-11 08:14 GMT
கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #Karunas #MaduraiHC
மதுரை:

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு நடைபெற்ற பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் நான் பங்கேற்று மரியாதை செலுத்தினேன். அப்போது எனது ஆதரவாளர்கள் தாக்கியதில் தேவர் பேரவை தலைவர் கார் சேதப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. இந்த வழக்கில் என்னை சேர்க்க முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Karunas #MaduraiHC
Tags:    

Similar News