செய்திகள்

4 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு

Published On 2018-10-09 17:11 GMT   |   Update On 2018-10-09 17:11 GMT
புதுக்கோட்டையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் மாக்சிஸ்ட் லெனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், தஞ்சாவூரில் இருந்து மதுரை வரை அமைக்க இருக்கும் 4 வழிச்சாலை திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்ட விவசாய நிலங்களில் அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக கல் ஊன்றியவர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இரு வழி தேசிய நெடுஞ்சாலையிலேயே போதிய அளவு வாகன போக்குவரத்து இல்லாததால் கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு ரூ.68 ஆயிரம் இழப்பு என்று கூறப்படும் நிலையில், இந்த திட்டம் தேவையற்றது. எனவே நான்குவழி சாலைக்காக விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல தி.மு.க. நகர செயலாளார் நைனாமுகமது தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி வழங்க வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதியை முறையாக செய்து தர வில்லை. மேலும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை.எனவே இனியாவது முறையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்கம்பத்தை மாற்றி தர வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

அரிமளம் பசுமை மீட்புக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரிமளத்தில் உள்ள நீர்நிலை வரத்து வாரிகளை தூர்வாரும் பணிகள் பசுமை மீட்புக் குழுவினரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்த பிறகு இரண்டு முறை மழை பெய்தும் வரத்து வாரிகளில் மழை நீர் வரவில்லை. இதுகுறித்து இங்கு களப்பணியாற்றிய இளைஞர்கள் ஆய்வு செய்தபோது, வனப்பகுதியினரால் பல இடங்களில் நீர்வரும் பாதைகளில் பெரிய வரப்பு அணைகள் அமைக்கப் பட்டிருப்பதை கண்டறிந்தனர். எங்கள் குழு வரத்து வாரிகளை தூர்வாரிய பிறகு அரிமளத்தில் 6 செ.மீ மழை பெய்தும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட வரப்பணைகள் தான். எனவே இந்த வரப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Tags:    

Similar News